Tuesday, March 17, 2009

நீதியின் குரலும் நியாயத்தின் செயலும்

நீதியின் குரலும் நியாயத்தின் செயலும்

நீதியை நிலை நாட்ட வேண்டிய வழக்கறிஞர்கள், நியாயத்தை நிலை நாட்டவேண்டிய காவல் துறை இவர்கள்தான் இன்றைய தேதியில் பட வரிசை பத்தில் முதல் இடம். இந்த அடிதடி (ACTION)படத்தின் முடிவு நீதிபதிகளின் கையில். இதுவரை எழுதப்படவில்லை, அனேகமாக இந்த படம் கலாநிதி மாறன் கலைஞர் பாசப்பறவை படம் போல் காமடியாக முடிவடையும் என்று எதிர்பார்கிறேன்

எழுத்தறிவில்லாத, படிப்பறிவில்லாத கிராமப்புற மக்களின் அன்றாட வாழ்க்கையின் நடுவே நடக்கும் சின்ன சின்ன பிரச்சினைகளுக்காக அவர்களால் இன்றும் நகரங்களில் வந்து ஒரு வழக்கறிஞரை அணுகி நீதி மன்றங்களில் வாதாடி பல பல வாய்தாக்கள் வாங்கி தனது பிரச்சினைகளுக்கு முடிவும் தெரியாமல் வழக்கறிஞர் ஊதியமும் கொடுத்து கொடுத்து தனது சொத்தும் அழிந்து தனது வாழ்க்கையும் அழிந்து உழைக்க நேரமும் இல்லாமல் கடைசியில் தான் படுத்த படுக்கையாய் ஆகும்போது வரும் தீர்பும் எதிர்தரப்பு வழக்கறிஞரின் வாதத்திறமையால் நீதி மறுப்பாய் ஆகிவிடும், நிம்மதியில்லாமல் இறந்தும் போவான், இப்படிப்பட்ட நிலைமைக்கு ஒரு கிராம வாசி ஆளாக நினைக்காததால்தான் இன்றும் தனது கிராமத்திலேயே இருக்கும் பஞ்சாயத்திற்கு தனது பிரச்சினைகளை எடுத்துச்சென்று நியாயமோ அநியாயமோ உடனடி தீர்வுக்கு விநயனாகிறான்.

இன்றைய சினிமாக்களில் எள்ளி நகையாடப்படுவதைப்போன்ற ஆலமரங்களோ செம்போ நீரோ ஒன்றும் இல்லாமல் அழகாக நாகரிகமாக விசாரித்து குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதற்கான தகுந்த தண்டனைகளும் சிறந்த நீதியும் வழங்கப்படுவதை கண்கூடாகப்பார்க்கலாம், இப்போதெல்லாம் கிராமங்களில் ஜமீன்தார்களோ, முதலாளிகளோ அல்ல தீர்ப்பு வழங்குவது, சாதாரண கூலி வேலை செய்யும் நியாயமான மனிதர்கள்தான், சட்டத்தின் முன்னால் அனைவரும் சமம். ஜாதி, மதம், இனம், மொழி என பிரித்தறிந்து யாருக்கும் துணை போவதோ கிடையாதுதான், இருப்பினும் கிராமங்களில் அந்தந்த ஜாதி அல்லது மதங்களைச்சார்ந்த மக்கள் தங்களின் அன்றாட தேவைகளுக்காக தாங்களே அமைத்துக்கொண்ட சமுதாயக்கூட்டமைப்புகளிலேயே தங்களது பிரச்சினைகளை எடுத்துச்செல்கிறார்கள். அவர்கள் ஒன்றும் சமூக விரோதத்தை தூண்டிவிடவோ அல்லது சமூகத்தில் பிரச்சினைகளை ஏற்படுத்தவோ இல்லை, அமைதியாக தங்களது வாழ்கையை நகர்த்திக்கொண்டு செல்கின்றனர்.
சில வேளைகளில் சில குற்றங்கள் குறைகள் ஏற்படுவது இயற்கைதான், அப்படி ஏற்படும் சில பிரச்சினைகளை பெரிது படுத்தி அந்த கிராமத்தையே தவறாகப்பார்ப்பதும் சமூகத்தில் கொலைக்குற்றவாளிகளைவிட மிக மோசமாக பார்பதும் நமது படிப்பறிவுள்ள மேன்மக்கள்(?)தான்.
ஒருமுறை வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவோ அல்லது பணம் கொடுத்து சாட்சிகளை குலைக்கவோ முடியாது. தண்டனைகள் கொஞ்சம் அசிங்கமாக இருக்கும் என்றாலும் மீண்டும் அதே தவறை செய்ய முனையமாட்டான். இதுதான் கிராம மக்கள் மன்றங்கள்.

ஆனால் படித்த சமூகம் செய்யும் தவறுகளை எந்த வகையில் சேர்ப்பது என்றே தெரியவில்லை. சமூகத்தை ஆபத்துக்களிலிருந்தும் அநியாயங்களிலிருந்தும் காப்பாற்றவேண்டிய காவல்த்துறை இந்தியாவின் எந்த பகுதியிலும் எப்படிப்பட்ட ரவுடிக்கும்பலாலும்,கொடூரமான தீவிரவாத கும்பலாலும் செய்துவிட முடியாத அளவிற்கு மிக மோசமான அருவருக்கத்தக்க விதமான ரவுடிச்செயல்களில் ஈடுபட்டது மிகவும் பயத்தையும் பீதியையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. மட்டுமல்ல காவல்துறையினர் தங்களால் முடிந்த அழவுக்கு வழக்கறிஞர்களின் மீதான தங்களின் கோபத்தையும் வெறுப்பையும் காண்பித்தவிதம் மிகவும் கொடுமை, தங்களை விட இவர்கள் மிக வசதி வாய்ப்புகள் பெற்றிருப்பதாக நினைத்தார்களோ என்னவோ வக்கீல்களின் விலை உயர்ந்த கார்கள் முதல் பாவம் குமாஸ்தாக்களின் டிவிஎஸ் 50 வரை அடித்து நொறுக்கினர், விஜயகாந்த் ஸ்டைலில் கால்களால் மிதித்து உடைக்கும்போதும் உடைந்தது வாகனங்கள் மட்டுமல்ல, நமது இதயங்களும்தான், காரணம் நீதிக்காக போராடும் வழக்கறிஞர்களுக்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்களான எங்களின் நிலை இறைவா நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. ஒரு சாதாரண வழக்கிற்காக காவல்துறையை நாடிப்போனால் அவர்கள் நம்மை நாயை விட மோசமாகவே பார்க்கிறார்க்ள், ஒரு கொலைக் குற்றவாளிக்கு இருக்கும் மரியாதை கூட சாதாரண மனிதனுக்கு கொடுக்க மறுக்கிறார்கள், அவர்கள் முன்னால் நாமெல்லாம் அடிமைகள், இதோ நானும் பல வருடங்களாக பல வளைகுடா நாடுகளின் காவல்துறைகளின் அணுகுமுறைகளை உற்று கவனித்தவன், அவர்கள் குற்றவாளியை பிடித்து வந்தாலும் கூட அவர்களை எவ்வளவு மரியாதையாக நடத்துகிறார்கள், அவர்களுக்கு சலாம் சொல்லிவிட்டு அவர்கள் பற்றிய விபரங்கள் கேட்கப்பட்டு அதன்பிறகுதான் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்,வ்சாரணை முடிவடைந்தபின் அதற்கான தண்டனை வழங்கப்படுகிறது. இது வழைகுடா நாடுகளில் மட்டுமல்ல, பல ஐரோப்பிய நாடுகளிலும், மற்றும் சில ஏழை நாடுகளிலும்கூட இருப்பதாக நான் அறிகிறேன்.
சில மாதங்களுக்கு முன்னால் எனது நண்பர் ஒருவருக்கு ஏற்பட்ட ஒரு மோசமான அனுபவத்தை நினைத்தால் இப்போதும் எனக்கு உடல் சூடேறுகிறது, எனது நண்பருடைய வீட்டில் அடிக்கடி இரவு நேரத்தில் ஒரு தொலைபேசி அழைப்பு வருவதும் அமுங்கிய குரலில் மிகவும் வக்கிரமாக பேசுவதும் யார் என்று கேட்டால் பேசாமல் இருப்பதும் இப்படியே ஒரு தொலைபேசி தொல்லை தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது.வேறு வழி இல்லாமல் யாரிடமும் சொல்லாமல் என்னிடம் மிகவும் வருத்தத்தோடு சொன்னான், என்ன செய்வது என்று கேட்டான், நானும் எனக்கு தெரிந்த BSNL நண்பர் ஒருவரிடம் விசாரித்துப்பார்த்தேன், வேறு வழி இல்லை நீங்கள் காவல்துறையை நாடி FIR போட்டு நகலோடு வாருங்கள் என்று சொல்லிவிட்டார், நான் பலமுறை கூறினேன், நமக்கு தொலைபேசி எண்ணை மாற்றிவிடுவோம் என்று, நண்பர் கேட்க்கவில்லை, ஆளை கண்டுபிடித்தே ஆகவேண்டும் என்று முடிவோடு இருந்ததால் காவல்துறை அலுவலகத்துக்கு சென்று வழக்குப்பதிவு செய்தோம், அதற்குப்பின் அங்கு இருந்த ஏட்டு எனது நண்பரிடம் விஷயங்களை கேட்டார், முதல் கேள்வியே எங்களை வெட்டி கொன்றது போல் இருந்தது,
உங்கள் மனைவி எப்படிப்பட்ட ஆள், இவங்களுக்கும் அவனுக்கும் என்ன தொடர்பு என்றும், அவன் ஏன் உங்க மனைவிக்கு மட்டும் பண்ணுகிறான் என்றும் இன்னும் பல கேட்க முடியாத வார்தைகளால் துளைத்தெடுத்தபின்னர், நாங்கள் கூப்பிட்டால் மனைவியை கூட்டிவிட்டு police station வரை வரவேண்டும் என்றும் சொன்னபோதே அவனுக்கு போதும் போதும் என்று ஆகிவிட்டது, அதன்பின்னர், அவன் என்னவெல்லாம் பேசினான் என்றும், கேட்டுவிட்டு அங்கே நின்ற ஓருவர் மூலமாக எங்களிடமிருந்து பணமும் பெற்றுக்கொண்டார். அதன் பின்னர் அன்று மாலையில் வீட்டிற்கே வந்து நண்பருடைய மனைவியிடம் இதே கேள்விகளை கேட்டு அவரை தர்மசங்கடப்படுத்திவிட்டனர், இதனால் மனம் உடைந்துபோன எனது நண்பர் என்னிடம் இனி எந்த ஃபோண் வந்தாலும் பரவாயில்லை இவர்கள் செய்யும் செயலுக்கு அவன் எவ்வாளவோ பரவா இல்லை அதனால் வேண்டாம் வழக்கை வாபஸ் வாங்கி விடலாம் என்று சொன்னார், உடனே காவல்துறை அலுவலகத்துக்கு போய் வழக்கை வாபஸ் பெறுவதாக கூறினோம், அதற்கு அவர்கள் ஒத்துக்கொள்ளாமல் போலீஸ் ஸ்டேஷன் உங்க அப்பன் வீடு சொத்தா என்றும், உம் பொண்டாட்டி சரியில்லாதவளா இருப்பா அது தெரிஞ்சிருக்கும் அதான் கேஸ் வாபஸ் வாங்க வந்தீங்களோ என்று கேட்டபோதே பாதி இறந்து விட்டோம், பின்னர் எப்படியோ ஒரு வக்கீலை வைத்து பணம் கொடுத்து கேஸ் வாபஸ் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. கடவுளே, இனி மேல் கொலையே நடந்தாலும் போலீஸ் ஸ்டேசன் வரமாட்டோம்ப்பா என்று சொல்லிவிட்டு இடத்தை காலி செய்தோம்.
நான் மொத்த காவல் துறையையும் குறை கூறவில்லை, ஆனால் மொத்த காவல் துறையிலும் இதன் பாதிப்புகள் இருப்பது மட்டும் உண்மை, சின்ன இடங்களில் சின்னதாய் இருப்பவை பெரிய இடங்களில் பெரிதாய் இருக்கும். இப்படிப்பட்ட மக்களுக்கான ஒரு பாதுகாபுத்துறை மக்களுக்காக சேவை செய்வதற்கான ஒரு அரசு இயந்திரம் மக்களுக்கே பயம் ஏற்படுத்தும் அளவில் மாறி இருப்பது உண்மையிலேயே வேதனையாகவும் வெட்கக்கேடாகவும் இருக்கிறது, இதில் ஆச்சர்யம் என்னவென்றால் கொலைகாரன், கொள்ளைக்காரன், கற்பழிப்பு, திருட்டு, இன்னும் பல மோசமான செயல்கள் செய்பவர்களெல்லாம் மிகவும் சர்வ சாதாரணமாகவும், மிகுந்த மரியாதையுடனும் நல்ல நண்பர்களாகவும் காவல்துறையில் சென்றும் வென்றும் (?) வருகிறார்கள். சாதாரண மனிதர்களை மதிக்க வேண்டாம், குறைந்தது அவர்களை மனிதனாகவாவது நடத்தலாம் அல்லவா.
காவல் துறையைக்கண்டு குற்றவாளிகள் பயப்பட வேண்டும், சாதாரண மக்கள் காவல்துறையை மதிக்க வேண்டும், நல்ல நண்பர்களாக மக்களுக்கிடையில் காவல் துறை பழகவேண்டும் அப்படி ஒரு காலம் வரும்போதுதான் குற்றங்களும் குற்றவாளிகளும் குறைவார்கள்.

சரி காவல் துறை இப்படியென்றால் இனி கொஞ்சமும் ஈவு இரக்கமில்லாத ஒரு மனித ஜாதி இருக்கிறது அதனைப்பற்றி பார்ப்போம்.

யார் எக்கேடு கெட்டுப்போனாலும் பரவாயில்லை யாம் சொல்வதும் செய்வதும்தான் சரி, இந்திய மண்ணில் நீதியும் நியாயமும் நாங்கள்தான் தீர்மானிக்கவேண்டும், எங்களை மீறி எதுவும் நடக்க அணுமதிக்க மாட்டோம் என்று இன்றும் தங்களின் சுய நலத்திற்காகவும் சுய சம்பாத்தியதிற்காகவும் நாட்டு மக்களின் வலியையும் வேதனையையும் பொருட்படுத்தாமல் அவர்களின் நீதி நியாயங்களின் மீதே ஏறி நின்று கபடியாடும் ஒரு கேடு கேட்ட சமூகம் வழக்கறிஞர் சமூகம் என்று நிரூபித்துக்காட்டியுள்ளனர் தமிழக வழக்கறிஞர்கள்.

எப்படிப்பட்ட கொடூரமான செயல் செய்தவனுக்கும் தனதான தனக்குரிய நியாய அனியாயங்களை சொல்வதற்கும் நீதி கேட்பதற்கும் உரிமையும், அதனை பொறுமையாக செவி மடுத்து கேட்பதற்கும் நமது நீதி பீடதிற்கு கடமையும் உரிமையும் உண்டு, இது ஜனநாயக நாடு, இங்கே எல்லோருக்கும் சமமான நீதி கிடைக்கவேண்டும், ஒரு நாட்டின் பிரதமர் மிகக்கொடூரமாக கொல்லப்படுகிறார், கொலை செய்தது நாங்கள்தான் என்று அதற்கு ஒரு விடுதலை இயக்கம் பொறுப்பேர்க்கிறது, குற்றவாளிகள் கைதாகிறார்கள், குற்றம் நிரூபிக்கப்படுகிறது, தண்டனை வழங்கப்பட்டு சிறையில் இருக்கிறார்கள், இன்னொரு நாட்டில் அதே இயக்கம் நடத்தும் தமிழ் இனத்திற்காக தனி நாடு கேட்கும் போராட்டதில் பல ஆயிரம் அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள், அவர்களுடைய போராட்டம் நியாயமோ அநியாயமோ, யாருக்காகப் போராடுகிறார்களோ அவர்கள் முழுமையாக கொல்லப்பட்ட பின்னர் யாருக்காக தனி நாடு. அந்த இயக்கத்திற்கும் அந்த நாட்டிற்குமான பிரச்சினைக்கு இப்போது போகவில்லை, அந்த இயகக்திற்காக போராடும் வழக்கறிஞர்களை விமர்சித்ததற்காக இன்னொரு பிரபலமான அரசியல் வல்லுனர் தாக்கப்படுகிறார், அதனை காவல்துறை கண்டிக்கிறது, அடங்க மறுக்கிறது வாதாடும் கூட்டம், காவல்துறை மீது கற்கள் வீசப்படுகிறது, உயர்ந்த போலீஸ் அதிகாரி தாக்கப்படுகிறார், மட்டுமல்ல, உயர் நீதிமன்ற வழாகத்தில் செயல்பட்டுவரும் காவல்துறை அலுவலகத்திற்கு வழக்கறிஞர்கள் தீ வைக்கிறார்கள், இப்போது காவல்துறை கோபத்தின் உச்சத்திற்கே சென்றுவிடுகிறது, அதற்குப்பின் மிகப்பெரிய யுத்தம், மேலே குறிப்பிட்டதைப்போல் காவல்துறை அத்துமீறுகிறது, நீதியும் நியாயமும் ஒன்றோடொன்று நேருக்கு நேர் மோதிக்கொள்கிறது. இதில் என்ன புரிகிறது, அமைதியையும், இறையாண்மையையும் கட்டிக்காக்கவேண்டிய நீதித்துறையும், அதனை செயல்வடிவம் கொடுக்கவேண்டிய காவல்துறையும் சாக்கடையில் கட்டிப்புராண்டு சண்டை போடும் பன்றிகளைவிட மோசமான நிலைக்கு போகிறது.

நமது நாட்டின் பிரதமரை கொன்றவன் நமக்கே கதாநாயகன் ஆகிறான், நமது நாட்டின் இறையாண்மையை கொன்ற இயக்கம் தேசத்தந்தை காந்தியின் அகிம்சை இயக்கத்தை விட சிறந்த இயக்கமாய் கருதப்படுகிறது, காந்தியையோ, நேருவையோபற்றி கூட நமது தமிழ்க அரசியல் வட்டராமும் அரசியல் தியாகி (?) தலைவர்களும் இவ்வளவு பேசியிருக்கமாட்டார்கள். பக்கத்து நாட்டு மக்களுக்காக நமது முதலமைச்சரும், நமது பிரதமரும் பதவி விலக வேண்டுமாம். இது என்ன நியாயமோ? இது என்ன நீதியோ?

ஒரு வழக்கறிஞர் எப்போதுமே வழக்கறிஞராக இருப்பதில்லை, அவனின் பரிணாம வழற்சி, நாளைய நீதிபதியாக, நாளைய கவர்ணராக, பொது மக்களின் பிரதி நிதியாக, என பல பரிணாமங்களில் பிறப்பீர்க்ள். குற்றவாளியான தனது கட்சிக்காரனுக்காக சட்டத்தின் ஏதாவது வழிகளை பயன்படுத்தி விடுதலை வாங்கிக்கொடுப்பதும், அதர்க்காக பல மடங்கு செல்வங்களை கட்டணமாக வசூலிப்பதும், அதனால் தலைச்சிறந்த வழக்கறிஞர் என பிரபலமாவதும் சரி என்று தோன்றலாம்.
ஒரு விஷயம் தெரிந்துகொள்ளவேண்டும், ஒருவன் மீது நியாயம் இருப்பின் அதனை நிரூபிப்பதர்க்கு பெரிய விலை கொடுக்கவோ, பிரபலமான வழக்கறிஞர்களோ தேவை இல்லை, மாறாக நியாயதிற்கு எதிராக நிற்கும் அனியாயக்காரனுக்காக வாதாட மிகப்பெரிய விலை கொடுத்து பிரபலமான வழக்கறிஞர்கள் தேவைப்படுவதாலேயே, நியாயம் அழிக்கப்படுகிறது.

அனியாயமாக கொலைசெய்யப்பட்டவனின் மனைவி நாதியற்றுப்போய் நீதி மன்றத்தை நாடுகிறாள், கொலைகாரனோ சுதாரித்துக்கொண்டு அவளுக்கு முன்னரே வழக்கு தொடர்ந்து விடுகிறான், அவனுக்காக வாதாட ஒரு வக்கீல் நல்ல விலைக்கு வாங்கப்படுகிறார், பாதிக்கப்பட்டவளிடம் எந்த வசதியும் இல்லை, வழக்கு நீதி மன்றத்தில் விவாதத்திற்கு வருகிறது, காரசாரமான விவாதம், பதிக்கப்பட்டவளின் வக்கீலால் ஈடு கொடுக்க முடியவில்லை, நீதிபதிக்கே தெரியும், குற்றவாளிக்கூண்டில் நிற்பவன் மிக மிகக் கொடூரமான கொலைகாரன் என்றும், அவன் தண்டனைக்குரியவன் என்ற்றும், இருந்தும் என்ன பயன், தனது வாதத்திறமையால் கொலைகாரன் வெற்றி அடைகிறான்,
இங்கே தோற்றது யார், பாதிக்கப்பட்ட பெண்ணா? அல்லது அவளின் வாதத்திறமை இல்லாத வக்கீலா? எதுவுமே இல்லை.
உன்மை என்னவென்று தெரிந்தும், குற்றவாளிக்கு விடுதலை வழங்கிய நீதிபதியா? யார்? யார்?.. சொல்லுங்கள்.
ஒன்றுமில்லை நீதியும் நேர்மையும் தான் அங்கே கொலை செய்யப்படுகிறது. எத்தனை முறை நமது நீதிபதிகள் நீதியை கொலை செய்கிறார்கள்.....

மீண்டும் பறண்டுவோம்..............