Wednesday, May 27, 2009

நிஜங்கள்.......


நிஜங்கள்.....

அள்ளி வீசப்படும்
வாக்குறுதிகளைப்போல் இருந்தது
அன்றைய பகல் எனக்கு
முற்றிலும் பொய்யாக....

காலையில் என்னை
கடந்து சென்ற அதிவேகப்
பேருந்தின் முன் இருக்கைப்
பெண் கை அசைத்துச்சென்றாள்
பரிச்சயமான முகம்தான் என்றலும்
எதுவரை யாரெனப்புரியவில்லை....

வீட்டுப்படிகளில்
ஓடோடி வந்து என்னை
அழைத்துச்சென்று
மதிய உணவைக்கூட ஒரு
விருந்தாய் பரிமாறினாள் அம்மா...

எப்போதும் என்னை
புகழ்ந்து பேசும் எதிர் வீட்டு
மாமி முதல் முறையாய்
என்னைப்பார்த்து சிரிக்க
மறுத்தாள்.......

வழக்கத்திற்கு மாறாக
என் தங்கை என்னைப்பார்த்து
அழத் துவங்கியிருந்தாள்....

சொந்தங்கள் சிலரெல்லாம்
என் வீடு தேடி வ்ந்து செல்வதுமாய்
களேபரமாகிக்கொண்டிருந்தது...

கை நிறைய பணத்துடன்
என் தாய் மாமன் என் வீட்டு
திண்ணையில் என் கைகளுக்குள்
திணிக்கிறார்
ஒரு முன்னறிவிப்புமில்லாமல்
தேடிக்கிடைக்காத ஏதோ ஒன்று
இலவசமாய் கிடைத்தார்போல்...

ஒரு புரியாத புதிருக்கு
விடை சொல்வதைப்போல்
நான் சிரித்துக்கொண்டேன்....

நான் கேலி செய்யப்படுவதாய்
உணர்ந்தேன்- எதுவும் கேட்டு
அறிய முடியாதவனாய்
விழி பிதுங்கி ஒதுங்கி நின்றேன்....

பக்கத்து வீட்டு சின்னப்பையன்
முதல் முறையாய் என் பக்கத்தில்
பயமில்லாமல் வந்தான்-
புன்சிரித்து என் கைகளில்
முத்தமிட்டுச் சென்றான்....

அதிசயித்து நின்றேன்
ஒரு கணம்- சூடம் ஏற்றி
தட்டோடு வந்தாள் அம்மா
மாலை இருட்டும் முன்
வீட்டுக்குள் வா மகனே என்றாள்....

சில வருடங்களுக்குப் பின்
முதன் முறையாய் என் தாய்
சனியனையும், தறுதலையையும்
மறந்திருந்தாள்...

என் கண்களை நானே
முத்தமிடத்துடித்தேன்-
எல்லோரும் என்னை அன்று
மௌன விரதமாக்கினர்...

ஒரு முறை ஒரே முறை
எனக்கு என்ன விஷேஷம்
என அறியத் துடித்தேன் - அவனுக்காய்
காத்திருந்தேன்...

என் மொழிக்கு காத்திராமல்
அவன் மறுமொழியோடு வந்தான்
நண்பா நளை நீ
துபாய் பயணப்படவேண்டும்
என்றான்.

எனது கேள்விகளை
புதைத்துக்கொண்டு
இதயத்தை உரமேற்ற
தயாறானேன்...

புதிய அன்பு
புதிய பாசம்
புதிய நேசம்
புதிய அழுகை
என எல்லா
பொய்களுக்கும் என்
மௌனத்தை மட்டும்
நிஜமாக்கிவிட்டு

அந்த பனி படர்ந்த
மறு நாள் அதிகாலை
பயண்மானேன்-

என் இன்பம்,
என் துன்பம்,
என் கோபம்,
என் கனவுகள் என
எல்லாம் அறிந்தும்

வெறும் நிஜமான
அன்பை மௌனமாய் சொல்லும்
என் வீட்டு நாய்க்கு மட்டும்
வாய் திறந்து பயணம் சொல்லி
நான் பயணமாகிறேன்.....



என்றும் பிரியமுடன்

பறண்டியான்...........