Wednesday, August 5, 2009

சேல்ஸ் மேன்......


சேல்ஸ் மேன்......

இடது கையில் எண்ணை
உறிஞ்சும் பேப்பரால் சுற்றப்பட்ட
சாண்ட்விட்ச் - வலது கையில்
ஸ்டீயரிங்,
இடை இடையே கியரும்
மாற்றவேண்டும்...


சீறிப்பாயும் அறபிகளின்
வண்டிகளுக்கிடையில் கவனமும்
சிதறக்கூடாது - பகுதி தின்றுவிட்ட
சான்ட்விட்சின் பேப்பரும்
அகற்றவேண்டும்,


நொடி இடையில்
முதல் ரோட்டிலிருந்து மூன்றாம்
ரோட்டிற்கு தாவும் வாகனங்களை
சரியாக கவனித்து ஓட்டவும் வேண்டும்.


ஏனெனில் பின்னிலிருந்து
இடித்தாலும் முன்னிலிருந்து
இடித்தாலும் இருவரும் அறிவர்
காத்திருப்பின் அவஸ்த்தையை...


சில நேரங்களில் மற்றவன்
உயிரின் ஊசலாட்டமும்
அது போகும் வலியும்
நம் கண்களில் பதியும்...


இப்படித்தான் அரபு நாட்டின்
சாலைகளும் மனிதன் சார்ந்த
வாழ்க்கையும் - ஒரு
பொறுப்பில்லாத உலகம்....


ஒரு அரபிக்கு
அன்றைய தினம்தான் அவனின்
லட்சியம் - ஒவ்வொரு
இந்தியனுக்கும் அன்றைய தினம்
லட்சியப்பாதையின் சில மணித்துளிகள்...


அலறித்துடிக்கும் மொபைல் போணில்
அவனின் மேலாளர் அசுரனாய் - தன்
தந்தைக்கே பயப்படாதவன் பணிவாய்
சொல்லும் "சாரி"கள் சில நொடிகளில்
கணக்கிலடங்கா...

வைத்த கை மாறாமல்
அடுத்த அழைப்பு
வங்காள விரிகுடாவை அடக்கி
அரபிக்கடலையும் தாண்டி
அவன் செல்போணில்- செல்லமாய்
சிணுங்குகிறாள் மனைவி,



எகிறித்துடிக்கிறான்
தன் ஆசை மனைவி என்றும் பாராமல்
சனியனே உனக்கு
நேரம் காலம் தெரியாதா என்று....

தன் அலுவலுக்கு முன் அன்பு
அடங்கிப்போகிறது - மீண்டும்
துளிர் விடுவதோ ஆறு மணிக்கு மேல்
சத்தமில்லாத முத்தங்களாய்,
அப்போதுதான் அலுவல்கள்
அழகான அன்பாய் பரிணமிக்கிறது....

காற்றைக் கிழிக்கும் வேகமும்
இடுப்பொடியும் பாரமும்
மறந்து போகிறான் தன் அன்பு மகனின்
அப்பா எனும் தொலை தூர
மழலை அழைப்பில்....

கடிதங்களை காத்திருக்க மனம்
பொறுப்பதில்லை- அதனால்த்தான்
தன் வியர்வைத் துளிகளை
தொலைபேசிக் கட்டணங்களாய்
கரைக்கிறான் வெள்ளிக்கிழமைகளில்.....

தான் படித்தபோது டிகிரிக்கு
கொடுத்த கல்விக்கட்டணத்தைவிட
பல மடங்கு பெரிதென்றாலும் தன்
பிள்ளைக்காய் எல்.கே.ஜி.
நுழைவுத்தேர்வு எழுதுகிறான்
பெருமையாய்.....


தான் வாங்காவிட்டாலும்
தகுதிக்கு மீறி கொடுக்கிறான்
வரதட்சினை
தகுதியே இல்லாத மாப்பிள்ளைக்கு
தன் தங்கைக்காய்...

இப்படியாய் வருடங்களின்
துவக்கமும் இறுதியும் பார்த்து
வயதை அடைகிறான்
நிம்மதியையும் தன்னையும் மறந்து...

ஒரு பொழுதில்,

ஒரே ஒரு கணம்,
நீ எனும் நீ எதையோ தொலைத்து
தேடுவதாய் உணர்வாய் - அன்று
நீ எனும் நீ உலகத்திற்கு காலாவதியாகிறாய்....


என்றும் பிரியமுடன்.........

பறண்டியான்........

No comments: